கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார். இதில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோருடன் கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறுவிதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுவந்தது. இவ்வேளையில் குமரி மாவட்ட மீனவரணித் தலைவர் சபின், மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தனது ஆதரவாளர்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்போட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதோடு இருபிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
பின்னர் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத் எழுந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, உங்கள் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை விட்டுவிட்டு கட்சிக்காக ஒற்றுமையுடன், பாடுபட்டு நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் வெற்றிபெற வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், வசந்தகுமாருக்கு எதிராகப் பேசிய மாவட்ட மீனவர் அணித் தலைவர் சபின் என்பவரை வசந்தகுமார், ஆதரவாளர்கள் அடித்தில் தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தில் சிறுது நேரம் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இருதரப்பினரையும் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.