தொடர் போர்கள், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் என அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாகப் போரட்டங்கள் அரங்கேறிவருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகினார். இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சரான முகமது தவுபிக் அலாவியைப் புதிய பிரதமராக அறிவித்தார். பதவியேற்ற பின் முகமது தவுபிக் அலாவி ஊழலுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடரும்படி போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டமைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பேற்க வைப்பதாகவும் ஊழலை எதிர்த்துப் போராடுவதாகவும் உறுதியளித்துள்ளர்.
ஷியா பிரிவைச் சேர்ந்த அலாவி, ஈராக் அரசியலில் பிரவேசத்திற்கு முன்பு லெபனான், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படித்து பணியாற்றியள்ளார். மேலும் அவர் பாக்தாத்தில் இரண்டு முறை தகவல்தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.