கொடைநாடு கொடை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரை விசாரணை செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் மரணம் விபத்து அல்ல கொலை என்று காவல் நிலையத்தில் அவரின் மனைவி புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் கனகராஜ் சகோதரர் பழனிவேல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.