தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2011-2012ம் ஆண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு 1,590 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி கூடுதலாக 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டன.
மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்களுக்கு கடைசியாக 1-1-2019 முதல் 31-12-2021 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. மேற்கண்ட பணியிடங்களுக்கான தற்காலிக நீட்டிப்பு தற்போது முடிவடைந்துள்ளதால் , இந்த பணியிடங்களுக்கு 1-1-2022 முதல் 31-12-2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த 1-1-2022 முதல் 31-12-2024 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதி துறையின் மறு ஆய்வில் முடிவெடுக்கும் வரை நீட்டிப்பு செய்ய ஆணையிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது