தமிழகத்தில் 44% பேருக்கு பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து தொற்றுபரவுவதாக சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பி ஏ 5 மற்றும் பி ஏ2.38 பகை பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது.
அதுதான் நோய் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம். முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை கூட மக்கள் யாரும் முறையாக கடைபிடிப்பதில்லை. எவ்வாறு தொற்று பரவுகிறது என்பது குறித்து அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பொது இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 26 சதவீதம் பேருக்கும், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் இருந்து 18 சதவீதம் பேருக்கும் தொற்று பரவி வருகிறது.
அதனைப் போலவே 16 சதவீதம் பேருக்கு பயணத்தின் போதும், 12 சதவீதம் பேருக்கு கல்வி நிறுவனங்களுக்கு சென்ற போதும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே இதனை தவிர்க்க சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு வருவோருக்கு தினம் தோறும் வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களை பணியிடங்களுக்கு அனுமதிக்க கூடாது.
அனைவரும் முகக் கவசம் முறையாக அணிந்து கை கழுவும் வசதிகளை பொது இடங்களில் ஏற்படுத்தி இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பணியிட அறைகளும் காற்றோட்டமான வகையில் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.