தமிழகத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சராக முதன்முறையாக கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். திமுக ஆட்சி அமைத்ததுமே அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும், திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அவரது நெருங்கிய நண்பரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி முதல் ஆளாக முன்மொழிய அதனை அனைத்து அமைச்சர்களும் வழிமொழிந்து உள்ளனர். ஒரு சிலர் துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ளனர். இருப்பினும் திமுக அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதிலும் உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராவார் எனும் எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதிக்கு தற்போதைக்கு அமைச்சர் பதவி தர முதல்வர் ஸ்டாலின் தயாராக இல்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம் வாரிசு அரசியல் என பெயர் வேண்டாம் என அவர் நினைப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கும் பட்சத்தில் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டு அது எதிர்க்கட்சிகளாக அதிமுக, பாஜகவிற்கு அரசை விமர்சனம் செய்வதற்கு நல் வாய்ப்பாக அமைந்து விடுமோ என்னும் தயக்கத்திலும் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சராகி விடலாம் எனும் எதிர்பார்ப்பில் இருந்த உதயநிதியிடம் வாரிசு அரசியலால் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறி முதல்வர் ஸ்டாலின் நோ சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது உதயநிதி ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் போது திமுக உட்கட்சி பூசல் வெளிவரும் என கூறியுள்ளார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.