தாயை பிரிந்து தவித்து நின்ற புள்ளி மான் குட்டியை பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு பருத்தி எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு புள்ளி மான் குட்டி ஒன்று தனது தாயை பிரிந்து தோட்டத்திற்குள் நின்றுள்ளது. இதனை பார்த்த ரமேஷ் அந்த மான் குட்டியை பாதுகாப்பாக பிடித்து செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இவர் வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த விளாத்திகுளம் வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மான் குட்டியை பெற்று குருமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர். இந்நிலையில் தாயைப் பிரிந்து பரிதவித்து நின்ற புள்ளி மான் குட்டியை பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயி ரமேஷை பொதுமக்களும் வன அலுவலர்களும் பாராட்டி வருகின்றனர்.