தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பனைமரத்தூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருநங்கை பெங்களூருக்கு சென்று விட்டார். இதனால் ரமேஷ் மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்துள்ளார். இதே போன்று அதே பகுதியில் வசிக்கும் தனியார் வங்கியில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கவின் மூர்த்தி என்பவர் அங்கு வந்து படுத்து தூங்குவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கவின் மூர்த்தி கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு படுத்திருந்த கவின் மூர்த்தியை ரமேஷ் எழுப்பியுள்ளார்.
மேலும் கவின் மூர்த்தி ரமேஷை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவின் மூர்த்தி ரமேஷின் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செல்வபுரம் காவல்துறையினர் கவின்மூர்த்தியை கைது செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கு விசாரணை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கவின் மூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் கவின் மூர்த்தியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.