சீனாவில் கொரானா வைரஸ் பரவி வரும் அதே வேளையில் அந்நாட்டை சேர்ந்த தனது காதலியை திட்டமிட்டபடி மத்திய பிரதேச இளைஞர் கரம் பிடித்து பாராட்டை பெற்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் மாண்ட்சரை சேர்ந்தவர் சத்யார்த் மிஸ்ரா. இவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படிக்கும்போது காதல் வயப்பட்டுள்ளனர். பின் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் பூதாகரமாக கொரானா வைரஸ் பரவத் தொடங்கி பல நாடுகளுக்கு பரவி ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.
கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த மணப்பெண் வீட்டார் முடிவு செய்து விட்டனர். அதன்படி மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரும் கடந்த புதன்கிழமையன்று மாண்ட்ஸர் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என மணப்பெண்ணின் பெற்றோரையும், உறவினரையும் மருத்துவர்கள் கண்காணித்து வந்துள்ளனர். இந்தநிலையில், திட்டமிட்டபடி நேற்று மணமகன் சத்யார்த்துக்கும், மணமகள் ஷிகாகோவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவில் இருந்து மணப்பெண்ணின் உறவினர்கள் சிலர் வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா எதிரொலியால் இ-விசா முறை ரத்து மற்றும் சீன அரசு அனுமதிக்காதது ஆகிய காரணங்களால் அவர்களால் இந்தியா வர இயலவில்லை.