நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் ஜாதிப் பிரிவுகளை குறிக்கும் விதமாக கயிறுகளை மாணவர்கள் கட்டி வருகிறார்கள். அதனால் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளை மற்றும் விளையாடும் நேரத்தில்,பள்ளி நேரங்களில் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக பிரிந்து இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்,மளிகை கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்களில் ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கயிறு, ஸ்டிக்கர்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற பொருள்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அருகே செயல்படும் கடைகளில் ஜாதி உணர்வை தூண்டும் வகையிலான வண்ண கயிறுகள், ஸ்டிக்கர்கள் மற்றும் டி- ஷர்ட்டுகள் போன்றவற்றை யாரும் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.