தமிழகத்தில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை அ.தி.மு.க சார்பில் சமர்ப்பிப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் என்று கூறினார். இந்த கடிதமானது அ.தி.மு.க கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்து போட தயாராக இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அதில் கையெழுத்து போடுவாரா எனவும் கேள்வி எழுப்பினார். இதன் மூலமாக கட்சியின் தொண்டர்களுக்கு உண்மை நிலவரமானது புரியும்.
இதனையடுத்து வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்து கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒற்றை த்தலைமை மட்டும் தான் வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி விண்ணப்பத்தில் கையெழுத்து போடாவிட்டால் அ.தி.மு.க சின்னமானது வேட்பாளர்களுக்கு கிடைக்காது. மேலும் விண்ணப்பத்தில் ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமாகிவிடும் என்று கூறினார்.