தமிழ்நாட்டில் மிருகவதை தடை சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒவ்வொரு லாரிகளிலும் அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகள் மட்டுமே ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்படுகிறது என கூறப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் கால்நடைத்துறை இணை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் சட்ட விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் கால்நடை துறைக்கு இல்லை சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்ட விதிகளை அமல்படுத்தும் டிஜிபி போக்குவரத்து ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு மிருகவதை சட்டவிதிகளை மீறி பசுக்கள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளை கொண்டுவரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
பிற மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகள் கொண்டு வரப்படுவது கண்காணிப்பதற்காக இரு மாநில எல்லைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இறைச்சிக்காக விலங்குகள் பலியிட ஒதுக்கப்பட்ட ஆட்டுதொட்டியில் மட்டுமே விலங்குகள் பலியிட வேண்டும் எனவும் திறந்தவெளியில் விலங்குகளை பலியிட கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மிருகவதை சட்டவிதிகளை மீறி தமிழகத்திற்குள் எந்த விலங்கும் கொண்டு வர அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.