மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கிரண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிரண் அதே பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த தனது தம்பியை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கிரணின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிரண் எதிரே வந்த வேனின் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.