கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த சில ஆடுகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் விளக்குகளை ஏற்றி ஆற்றிலிருந்து ஆடுகளை மீட்டுள்ளனர். அதில் 8 ஆடுகளை மட்டும் மீட்ட நிலையில், மற்ற ஆடுகளை இரவு நேரம் என்பதால் மீட்க முடியாமல் போனது. இந்த ஆடுகளின் உரிமையாளர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் புதைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீன்கள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக ஆற்றில் விஷம் கலந்து இருக்கும் என மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.