அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 11 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக 2019 டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதனிடையே 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்ஷோ நீதிபதி மஞ்சுளா 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் (55) மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்படுவார் என்றும், 15 குற்றவாளிகளுக்கு (3-ஆம் தேதி) இன்று தண்டனை விவரம் வெளியாகும் எனவும் தீர்ப்பளித்தார். இந்தநிலையில் இன்று குற்றவாளிகள் போலீசார் பாதுகாப்புடன் 15 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ரவிக்குமார், அபிஷேக், சுரேஷ், பழனி 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார் நீதிபதி மஞ்சுளா. சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.