கர்நாடகா மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மூலமாக நுகர்வோருக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மின் விநியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மின் வினியோக நிறுவனங்களுக்கு இடையே வெவ்வேறு அளவில் மாறுபடுகிறது. இந்த மின் கட்டண உயர்வு இன்று(ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது. தற்போது இந்த கட்டணம் 6 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.