Categories
கல்வி மாநில செய்திகள்

TNPSC  முறைகேட்டால் …  TRB தேர்வாளர்  அதிர்ச்சி …!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு எதிரொலி டி.ஆர்.பி. தேர்வில் சொந்த மாவட்டத்தில் எழுத அனுமதி கிடையாது என தகவல் வெளிவந்துள்ளன.

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பின் வழியாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பித்தனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனர். கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருப்பதற்கு உரிய சான்றிதழுடன் கோரிக்கைவைத்தால அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பார்கள்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு சொந்த மாவட்டம் தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலர் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும் எந்தவித முறைகேடும் நடைபெறாமலும், முற்றிலும் நேர்மையாக நடைபெறும் வகையில் தேர்வர்களின் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வுமையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தேர்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தேர்விற்கு 3 நாள் முன்பாக தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும்.

இதனால், தேர்வு மையங்களில் உள்ளவர்களுடன், இடைத்தரகர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

ஏற்கனவே அவர் பணிபுரிந்த மாவட்டத்திற்கும், அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தேர்வர்கள், தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலர்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வுசெய்து அளிக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |