குரூப் 2ஏ தேர்வில் எப்படி முறைகேடு நடந்தது ? என்று சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு சம்பந்தமாக 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் 8 பேரை கைது செய்திருக்கின்றார்கள். அந்த 8 பேருமே அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல இந்த குரூப் 2ஏ தேர்வு முறைகேடு எப்படி நடந்தது ? என்பது தொடர்பான தகவல்கள் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குரூப்-4 தேர்வை பொருத்தவரை எளிதில் அழியக்கூடிய மை கொண்ட பேனாவை பயன்படுத்தி அந்த விடைத்தாள்களில் கேள்விகளுக்கு பதிலளித்து , அதன் மூலம் இந்த முறைகேடு நடந்துள்ளது என்று சிபிசிஐடி விசாரணை தெரியவந்தது. இதற்கிடையில் குரூப்-2ஏ தேர்வை பொருத்தவரை 2017 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி இருக்க கூடிய அந்த 42 பேர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.
குறிப்பாக தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முதல் 20 கேள்விகளுக்கான விடையை மட்டுமே அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு வேறு எந்த ஒரு கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக அவர்கள் விடைத்தாள்களை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இதே போல ஜெயக்குமார் தலைமையிலான இருக்கக்கூடிய ஒரு மோசடி கும்பல் அந்த விடைத்தாள்களை எடுத்து மற்ற கேள்விகளுக்கான பதிலை இணைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஏனென்றால் முதல் 20 கேள்விகளுக்கு விடையளித்து இருக்கக் கூடியவர்கள் தான் தனக்கு பணம் கொடுத்தவர்கள் என்பதை அடையாள படுத்துவதற்கான ஒரு குறியீடாக வைத்து இருக்கிறார்கள் இந்த மோசடி கும்பல். அந்த குறியீட்டின் மூலமாக தான் பிற கேள்விகளுக்கு விடைதாள் இணைக்கப்பட்டு , தேர்வில் வெற்றி பெற்று , 42 பேரும் அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.