ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது.
அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், ஓசூர் பகுதிகளில் கடந்த எட்டு மாதங்களில் பத்திருக்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்துள்ளது. அதனால் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பது அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரியில் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் இரண்டு கூண்டுகளை வைத்தனர். மேலும் அந்தக் கூட்டில் ஆட்டையும் கட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூண்டில் வைத்திருந்த ஆடை தின்பதற்காக சிறுத்தை வந்தது அப்போது அந்த கூண்டில் சிறுத்தை வசமாக சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர் சதாசிவம் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா பேசும்போது கூண்டில் சிக்கியது நான்கு வயது உடைய ஆண் சிறுத்தை. பிடிபட்ட சிறுத்தையானது தெம்மாங்குமரஹடா மங்கலப்பட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும் என கூறியுள்ளார். மேலும் கூண்டில் சிக்கிய சிறுத்தை நல்ல நிலையில் இருப்பதாக கால்நடை டாக்டர் சதாசிவம் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக தாளவாடி பகுதியில் கால்நடைகளை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையானது வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை நிம்மதியடைய செய்திருக்கின்றது.