பொதுமக்களுக்கு மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்டு தீமைகள் குறித்து பொள்ளாச்சி பேருந்து நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இந்த சுரங்க பாதையில் சில பேர் உட்கார்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பில் சுரங்கப் பாதையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்ததானம், கொரோனா தடுப்பு, மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறை மீறல் என தத்ரூபமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சுரங்க பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இந்நிலையில் மேற்கூரை சேதமடைந்து கிடப்பதால் மழைநீர் சுரங்க பாதைக்குள் விழுகிறது. எனவே பொதுமக்களுக்கு சுரங்க பாதை இருப்பது தெரியும் வகையில் நுழைவு வாயிலில் ஓவியங்கள் வரைதல், பெயர் பலகைகளை வைக்க வேண்டும். மேலும் சுரங்க பாதை வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.