தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அந்த துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரிசோதனை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பானது இணைநோய் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலத்தில் இதனால் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் தற்போது நோயின் பரிணாம வளர்ச்சியால் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஒரு குடும்பத்தில் அதிக நபர்கள் இருக்கும்போது அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக நேர்கின்றது. அனைவரும் தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அதனால் பத்துக்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மேலும் பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.