தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.
அதன்பிறகு மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும்போது தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். மேலும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.