நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓராண்டுக்கு பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கப்சி பகுதியில் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியில் பங்கஜ் திலிப் கிரம்கர் என்பவரும் வசித்து வந்தார். இந்தநிலையில் தாகூருக்கும், கிரம்கர் மனைவிக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பங்கஜ் மனைவி ஹோட்டலுக்கு சென்று வந்ததால் இந்த உறவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ஒருநாள் கணவன் கிரம்கருக்கு தெரியவர, குடும்பத்தோடு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். சரி இனி நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தால், அப்போதும் அவர்களது பழக்கம் நீடித்து கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிரம்கர் நேரடியாக தாக்கூரின் கடைக்கு சென்று எச்சரித்துள்ளார்.
அப்போது இருவருக்கு தகராறு ஏற்பட்டதில் கிரம்கர் பலமாக தாக்கப்பட்டு, உயிரிழந்தார். பின்னர் என்ன செய்வதென்று யோசித்த தாகூர், கிரம்கரின் உடலை ஒரு டிரம்மில் வைத்து, ஊழியர்களின் உதவியுடன் ஹோட்டலின் பின்புறம் பெரிய குழி தோண்டி 50 கிலோ உப்புடன் சேர்த்து புதைத்தார். மேலும் பைக்கையும் அவருடன் சேர்த்து புதைத்து விட்டார் தாக்கூர். அதைத்தொடர்ந்து பாபநாசம் பட பாணியில் அவரது செல்போனை சாமர்த்தியமாக ராஜஸ்தான் சென்ற ஒரு லாரியில் வீசியெறிந்து விட்டு இனி பிரச்னையில்லை என்று நினைத்துள்ளார்.
இதையடுத்து நீண்ட நேரமாகியும் கிரம்கர் வீடு திரும்பாததால் மாயமானதாக குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட ஓராண்டு கடந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆதாரங்களை திரட்டி தாக்கூர் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் துறுவி துறுவி விசாரித்ததில் கிரம்கரை நாங்கள் தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.