10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் மேலாக உள்ளது. பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம். தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது தவணை தடுப்பூசி அதாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நபர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 95 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 85 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செய்யும் செலுத்தியுள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும், 18 முதல் 59 வயது உடையவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் செலுத்தப்பட்டு வருகின்றது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவுக்கு ஆளானவரில் 95 சதவீதம் பேர் வீட்டில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு நாளுக்கு முப்பதாயிரத்துக்கும் மேல் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? என்று கேள்விக்கு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு அதிமுக தலைமைக்கு உள்ளது. தங்கள் நிர்வாகிகளை பாதுகாப்பான முறையில் முக கவசம் அணியக் கூறி, அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுக் குழுவை நடத்த வேண்டிய பொறுப்பும் கட்சி தலைமைக்கு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.