பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பு காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருந்த விவகாரம் தொடர்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தூர்க்கர் மற்றும் ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு 16 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட கர்ப்பம் என்பதால் இது தேவையற்ற கர்ப்பம் என கோர்ட்டு கருத்துவதாகவும், குழந்தையை பெற்றெடுக்க எந்த பெண்ணையும் வற்புறுத்த முடியாது என்றும் அது அவர்களின் தனி விருப்பம் எனக் கூறியிருந்தது.
மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனுதாரர் 16 வார கர்ப்பமாக உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பத்தை தொடர்ந்தால் அது பெண்ணின் வாழ்க்கை மற்றும் மனரீதியாக பெரும் அழுத்தத்தை கொடுக்கும். அதே போல் குழந்தையை பெற்றெடுத்தால் கூட அது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு கருவை கலைக்க அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுவாக ஒரு பெண் கருவை கலைக்க முடிவு செய்தால் 12 வாரத்திற்குள் கலைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.