பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நாட்டை போல பாகிஸ்தானிலும் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறியதாவது, நாடு முழுவதும் இந்த மாதம் கடுமையான மின்வெட்டு ஏற்படும். இதனால் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பணியை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தையும் முன் கூட்டியே மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல மணி நேரம் மின் வெட்டு இருப்பதால் பாகிஸ்தான் நாட்டில் இணையதள சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக தொலைத்தொடர்பு துறையின் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனை தீர்க்க எரிபொருள் இறக்குமதிக்காக கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் நாட்டின் நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.