தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அரசு மற்றும் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது இதனை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு உத்தரவிட்டது.
அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.
அதன்படி துறை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் போது அதில் 10 பேருக்கு மேல் பங்கேற்றால் கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். பொது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் பங்கேற்பவர்களும், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மிகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அதனைப் போலவே அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.