முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது.
கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, புதிய கோழி குஞ்சுகளை பண்ணைகளில் விடாமல் வைத்தது ஆகிய காரணங்களால் இந்த விலை உயர்வை சந்திக்க வேண்டியுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வது தான் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோழி பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.