மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோவை ரஷ்யா கடுமையாக விமர்சித்தது. மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பிளவில் இந்தியாவும், சீனாவும் உள் இழுக்கப்படுகிறார்கள் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை தொடர்ந்து மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்து, அதற்குரிய விண்ணப்பத்தையும் சமர்பித்து இருந்தனர்.
இதில் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் இந்த முயற்சிக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்த ரஷ்யா, இந்த முடிவு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தது. இந்நிலையில் நோட்டோவின் செயல்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், நோட்டோவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை கூறினார். அத்துடன் மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பிளவுக்குள் சீனாவையும், இந்தியாவையும் இழுக்கும் விதமாக நோட்டோவின் கருத்துகள் உள்ளதாகவும், இருநாடுகளின் விவகாரங்களிலும் நோட்டோ தன்னை ஈடுபடுத்த முற்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இப்போது நோட்டோ தங்களை உலகின் பாதுகாப்பிற்கான பரிணாம பொறுப்பை பெற வேண்டும் என கூறுகிறார்கள். அவர்கள் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை பற்றி கூறும்போது, குறிப்பாக இந்தியாவை தங்களது நெட்வொர்க்களுக்குள் ஈர்க்கவே அவர்கள் இந்த கூற்றை தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்தார். நோட்டோவின் அடுத்த தற்காப்பு கூட்டணியின் பாதுகாப்பு வரிசை தென் சீனக்கடலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.