வலியான, வளமான நாடாக இருந்தால்தான் இருநாடுகளின் பிரச்சனையில் ஒரு சார்பு எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையில் ரஷ்யாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் இப்போர் தொடர்பில் எந்த நாட்டிற்கு ஆதரவான நிலைபாட்டையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் உக்ரைன் மீது போர் புரிந்துவரும் ரஷ்யாவை கண்டித்து பாகிஸ்தான் ஏன் பேசவில்லை என்று இம்ரான்கான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கூறியதாவது “பாகிஸ்தானின் எதிர்காலம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக கோதுமை, எண்ணெய், எரிவாயு போன்றவற்றுக்காக அந்நாட்டை சார்ந்து உள்ளது. ஏனெனில் நாங்கள் எங்களது நாட்டின் 220 மில்லியன் மக்களுக்காக ரஷ்யாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறோம்.
இதனால் மக்களை நீங்கள் கண்டிக்க ஆரம்பிக்கும் போது ஒருசார்பு எடுக்க வேண்டும். பொதுவாகவே சர்வதேச பிரச்சனைகளில் ஒரு தார்மீகமான சார்பு நிலைப்பாட்டினை எடுப்பது நல்ல விடயம்தான். எனினும் உங்கள் நாடு மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் யாருக்கும் ஆதரவான (அல்லது) எதிரான நிலைப்பாட்டினை எடுக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டும் எனில் உங்களது நாடு செழிப்பான மற்றும் வலிமையான நாடாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடானது பொருளாதார சிக்கலில் தவித்துவருகிறது. மற்றோருபுறம் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய பிரதமரை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.