இந்திய பொருளாதாரம் சரிந்துவரும் நிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2020 பட்ஜெட்டானது மாநில அரசுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பட்ஜெட் குறித்த உரையில், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான நிதிநிலை அறிக்கையில் தான் அறிவித்த சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யமுடியவில்லை என நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும் தனி நபர் வருமானவரியில் சில மாற்றங்களையும் கொண்டுவந்தார்.
2012-2013ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடும் சரிவை சந்தித்துவருகிறது. 2019ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இந்த உற்பத்தி 4.5 விழுக்காடாக சரிந்தது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்நிலையில், தற்போது குறைக்கப்பட்ட தனிநபர் வருமானவரியால், 2019ஆம் ஆண்டு தனி நபர் வருமானவரி மூலம் மாநிலங்களுக்கு வரவிருந்த 8.09 லட்சம் கோடி ரூபாய்க்குப் பதிலாக 6.56 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரும். இதன் மூலம் மாநில அரசுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் அல்லது 18.91 சதவிகிதம் நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.