ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கம்பங்குடி அக்ரஹாரத்தெருவில் ஒய்வு பெற்ற ஆசிரியரான பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் மன்னார்குடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கம்பன்குடி ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் 2 வாலிபர்கள் மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஓட்டி வந்த கார் எதிரே வந்த பக்கிரிசாமி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பக்கிரிசாமியின் உடலை உடனடியாக மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காரில் வந்த கீழப்பள்ளிசந்தம் கிராமத்தில் வசிக்கும் வேதமணி, கஜேந்திரன் ஆகிய இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.