மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் ஆனஸ்ட்ராஜ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனஸ்ட்ராஜ் அவரது மனைவி விஜயா உடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பெண் போலீசார் ஆனஸ்ட்ராஜை தடுக்க முயற்சித்தனர். அப்போது அவர் அவர்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் கஞ்சா போதையில் இருந்த ராஜ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் அங்குமிங்கும் ஓடியபடி இருந்துள்ளார்.
அப்போது வேப்பேரி போலீஸ்காரர் ஒருவர் ஆனஸ்ட்ராஜ் மடக்கி பிடித்து அவரது கையில் வைத்திருந்த பிளேடையும், கத்தியையும் பிடுங்கியுள்ளார். இதனை எடுத்து போலீசாரிடம் ஆனஸ்ட்ராஜ் கூறியதாவது, எனது அண்ணன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க சென்றபோது காவலுக்கு இருந்த போலீசார் என்னை தாக்கி பணத்தை பறித்து கொண்டனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அடம்பிடித்தார். இறுதியில் வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் அரிகுமார் பேச்சுவார்த்தை நடத்தி ஆனஸ்ட்ராஜை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.