செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து வருகின்றது.
இந்த சூழலில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் சர்வதேச செஸ் வீரர்களுக்கு அவர்களின் உடல்நிலை பாதிக்காத விதமாக சுத்தமான, சுகாதாரமான, தரமான உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து பாதுகாப்பான முறையில் உணவு சமைத்து தருவது சம்பந்தமாக அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் கூட மேலாளர்கள், தலைமை சமையல் கலைஞர்கள் போன்றோரை அழைத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையம் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற சூழலில் சர்வதேச செஸ் வீரர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களின் உணவு சமைக்கும் இடத்தை எப்போதும் சுத்தமானதாக வைத்திருக்க வேண்டும் உணவிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உணவு தர கட்டுப்பாடு சான்று மற்றும் அங்கீகாரம் உள்ள உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் சரியான தட்பவெப்ப நிலையில் இருப்பது போல சைவ, அசைவ உணவுகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.
சுத்தமான நீரையே உணவு சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தக் கூடாது போன்ற விதிமுறைகளை அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் உணவு கூடத்தினர் பின்பற்ற வேண்டும் என அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டத்தின் முடிவில் 15 நாட்கள் பயிற்சி பெற்ற நட்சத்திர ஓட்டல்களின் உணவு மேற்பார்வையாளர்களும், தலைமை சமையல் கலைஞர்களும், உணவு மேற்பார்வையாளர் சான்றிதழை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வின் வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு நல அலுவலர் முருகானந்தம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.