விவசாயி வீட்டு திண்ணையில் கேட்பாரற்று இருந்த பச்சிளம் குழந்தை இருந்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அடுத்திருக்கும் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் பீமாபுரத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் விவசாயி. இவரின் வீட்டின் திண்ணையில் நேற்று காலை பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தையை யார் திண்ணையில் வைத்து சென்றது என தெரியவில்லை. இதனால் ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் போலீசாருக்கும் சமூக நலத்துறையினருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் குழந்தையை கைப்பற்றி சமூக நல அலுவலரிடம் ஒப்படைத்தார்கள்.
இதுப்பற்றி சமூக நல அலுவலர் கனிமொழி கூறியுள்ளதாவது, கைப்பற்றப்பட்ட பச்சிளம் குழந்தையை மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்து தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படும். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பராமரிக்கப்படும். மேலும் குழந்தைக்கு யாராவது சொந்தம் கொண்டாடி வந்தால் அவர்களிடம் விசாரணை செய்து குழந்தையை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.