Categories
மாவட்ட செய்திகள்

மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கு…. என்ஜினீயருடன் கைதான மனைவி… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஒரு மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் செம்மணங்கூர் என்னும் கிராமத்தில் வசித்த  மளிகைக்கடைக்காரரான சந்தோஷ் குமாரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் என்ற இளைஞர் கைதானார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வருடம் சந்தோஷ் குமாரும் அவரின் மனைவி வசந்தகுமாரியும் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கள் வாடகை காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, அந்த வாகனத்தின் ஓட்டுனரான என்ஜினீயர் முருகன், வசந்தகுமாரியுடன் பழகி உள்ளார்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். இதனை அறிந்து கொண்ட சந்தோஷ் குமார் இருவரையும் கண்டித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று சிறிய வேலைக்காக சந்தோஷ் குமார் முருகனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, தன் மனைவியுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு சந்தோஷ் குமார் முருகனிடம் கூறியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த முருகன், மது பாட்டிலை எடுத்து சந்தோஷ் குமாரை குத்தி கொன்றுள்ளார். அதன் பிறகு, அவரின் உடலை தார்ப்பாயில் சுற்றி ஆற்றங்கரை அருகில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.

இது குறித்து வசந்தகுமாரியிடம் முருகன் கூறி இருக்கிறார். அதனை தொடர்ந்து இருவரும் சந்தோஷ்குமாரை காணவில்லை என்று நாடகம் பாடியுள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

அதன் பிறகு தான் இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |