திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினத்தன்று தாய் வேலைக்கு செல்ல, தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அண்ணனிடம் விளையாட செல்வதாக கூறி வெளியே சென்ற சிறுமி திரும்பி வீட்டிற்கு வரவே இல்லை. பின் தாய் வீட்டிற்கு வந்ததும் எங்கு தேடியும் சிறுமி காணாததால் ஊருக்கு வெளியில் தேடியுள்ளார். அங்கு தோட்டத்தில் டிராக்டர் ஒன்றின் அருகே தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்துள்ளார் சிறுமி. இதைக்கண்ட பெற்றோர்கள் பதட்டத்துடன் அவரை தூக்கிக் கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூற, காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் அவர் சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து யார் இந்த குற்ற செயலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போக்சோ சட்டப்பிரிவு மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் உமா சேகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.