பாகிஸ்தான் நாட்டில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அதிக அளவில் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.14.84 விலையாக உயர்ந்தது. இது ஒரு மாதத்தில் 4வது முறையாக அதிகரித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.248.74 ஆக உள்ளது. இதனை பாகிஸ்தானிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.13.23 உயர்ந்து அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.276.54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மண்ணெண்ணெய் ரூ.18.83 ஆக விலை உயர்ந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்களது வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து கொள்ள கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் ஒட்டு மொத்த பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு 11 % குறைந்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான எண்ணெய் விற்பனை 22.5 மில்லியன் டன்களாக உள்ளது. இங்கு எரிவாயு வினியோக பற்றாக்குறையால் துணி தொழிற்சாலைகளும் வருகிற 8ந்தேதி வரை தொடர்ந்து மூடியிருப்பதற்கு முடிவு செய்துள்ளன. ஏற்கனவே 30 % துணி உற்பத்தி குறைந்துள்ளது. இங்கு எரிவாயு பற்றாக்குறையால் 50 % வரை உற்பத்தி குறையும் பாதிப்பு உள்ளது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட கூடிய சூழல் நிலவுகிறது.