சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், “உலகின் வளர்ச்சியடையும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020-21 ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8ஆக இருக்கும் எனவும் 2021-22 ஆண்டில் சீனாவை முந்தி 6.5 விழுக்காடு வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் எனவும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை. 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 7.5 ஆக இருந்தது என தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 நாடுகளிலேயே இந்தியாதான் அதிகபட்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சியில் இந்தியா மேம்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலீடுகளையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. எல்ஐசி நிறுவனத்தில் காப்பீடு பெற்றவர்களின் நலனை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை. அதன் பங்குகள் விற்கப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை பொது மக்களின் பங்கேற்பு ஆகியவை அதிகரிக்கும். பங்குச்சந்தை விரிவடையும்” என்றார்.