சோழர் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி அருகே சிகரமாகானபள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக மாவட்ட வரலாறு ஆவணப்படுத்தும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி மருத்துவர் லோகேஷ் தலைமையிலான கிருஷ்ணகிரி அவழ்வாராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு பாறையில் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறையானது 6 துண்டுகளாக உடைக்கப்பட்டிருந்ததால் கல்வெட்டானது சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்த போது அது சோழர் காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்தது.
இந்த கல்வெட்டு சுமார் 781 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அதன் பிறகு சோழ வம்சத்தை சேர்ந்த மூன்றாம் ராஜராஜன், ஒய்சால மன்னன், சோமேஸ்வர மன்னன் ஆகியோர் அந்த இடத்தை ஆட்சி செய்துள்ளனர். அதே நேரம் இந்த 3 மன்னர்களின் தலைமையை ஏற்காத தாமத்தாழ்வார் மன்னன் சுதந்திர ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கங்கைகொண்ட ஈஸ்வரன் என்ற பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது என்றும், அந்த கோவில் சேதம் அடைந்ததால் அதை மன்னர் புதுப்பித்து 1000 ஏக்கர் நிலத்தை தானமாக கோவிலுக்கு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1000 வருடங்களுக்கு முந்தைய பழமை வாய்ந்த நடுக்கல், பாறை ஓவியங்கள் மற்றும் கோவில்கள் போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.