ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சிட்னி நகரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழையால் சிட்னி நகரம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கடுமையான வெள்ளத்தில் மூழ்கிய மேற்கு சிட்னியில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சிட்னியின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான கேம்டனில், கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகால சேவை துறை மந்திரி ஸ்டெபனி குக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இது உயிருக்கு ஆபத்தான அவசர நிலை. வரவிருக்கும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் குறுகிய அறிவிப்பில் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும். மேலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய சிட்னியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிப்பவர்கள், மோசமான வானிலை காரணமாக தங்கள் பள்ளி விடுமுறை பயணத் திட்டங்களை ரத்து செய்துள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவசரகால சேவைகள் மூலம், 29 இடங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், அவசரகால சேவைப்பிரிவுக்கு 1,400க்கும் அதிகமான போன் அழைப்புகள் வந்துள்ளன. இங்கு காலநிலை மாற்றத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெள்ளம் ஆகியவை அங்கு தீவிரமானதாக உருவெடுத்துள்ளன.