டென்மார்க் தலைநகரமான கோபன்ஹகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகில் வணிக வளாகம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறடித்து வெளியே ஓடினர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய 22 வயதான இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் உள்நாட்டை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரின் பெயர் என்ன? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.