201 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணையை 6 அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கயம் பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கணேசன், கயல்விழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த முகாமில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, ‘படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை இந்த அரசு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது’ என்றார்.
மேலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்’ என்றார். இந்நிலையில் தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தமிழகத்தில் 62 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 90 ஆயிரத்து 643 பேருக்கு வேலை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் இந்த ஆண்டு ரூ.2,877 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளோம் எனவும் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
இதனையடுத்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது, வெளிநாடுகளில் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி தனியார் முகவர்களிடம் சிக்கி இளைஞர்கள் தவித்து வந்த நிலையை மாற்றியமைத்து அரசே அவர்களை பதிவு செய்து சட்ட திட்டங்களுடன் வேலைவாய்ப்பை கொடுக்கும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார் என்றார். இதனை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்து தொழில் செய்யும் வகையில் உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளார் என்று கூறினார்.
அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசும்போது, படித்து முடித்த இளைஞர்கள் அரசு துறை வேலைக்கு போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் எனவும், அரசு வேலைக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டால் அந்த காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது என்று கூறினார். இந்த விழாவில் மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன், வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 11 ஆயிரத்து 306 பேர் கலந்து கொண்டவர்களில் 2401 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து 2-வது கட்ட தேர்வுக்கு 559 பேர் தகுதி பெற்றுள்ளனர். மேலும் புதிதாக திறன் மேம்பாட்டு பயிற்சி பெற 260 பேரும், வெளிநாட்டு வேலைக்கு 187 பேரும் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.