அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் இந்த கலாச்சாரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அந்த வகையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், திடீரென பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விடுதி மாணவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது 2 பெண்கள் குண்டு துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மேலும் அந்த இடத்தில் 2 வயதான குழந்தை ஒன்று காயத்துடன் இருந்தது. இதனை பார்த்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், கொலை செய்த குற்றவாளி யார் என பல இடங்களில் தேடி வருகின்றனர். பலியான இரண்டு பெண்களும் மாணவிகளா என்ற விவரமும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.