Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்காக…. நியமிக்கப்படவுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள்…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நாள்தோறும் கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான உப கோவில்களில் பாதுகாப்பு பணியில் தேர்வு செய்ய கோவில் நிர்வாகம் ஒப்பந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஒப்பந்த அறிவிப்பின்படி பாதுகாப்பு பிரிவில் பணியாற்ற 67 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மின் உதவியாளர், ஓட்டுனர், பிளம்பர் என சுமார் 79 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 30 வயது முதல் 50 வயது உடைய முன்னாள் ராணுவ வீரர்கள் தகுதி உடையவர் எனவும், 84 வகையான நிபந்தனைகளை விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியிலும், வருகிற 14-ந்தேதி வரை கோவில் அலுவலகத்திலும் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |