திடீரென ஏற்பட்ட வன்முறையால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரகல்பக்ஸ்தான் பகுதியில் தன்னாட்சி அதிகாரம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளே அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபெற்று வரும் தன்னாட்சி அதிகாரித்தை ரத்து செய்வதற்காக அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்கு கரகல்பக்ஸ்தான் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 1-ம் தேதி முதல் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் ராணுவ வீரர்களை களத்தில் இறக்கினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.