Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் காலை இழந்து தவிக்கும் பெண்…. அரசு வேலை கேட்டு கலெக்டரிடம் மனு….!!

தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண் அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒற்றைக்கால் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் அழுதபடி வந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், நத்தம் அசோக்நகர் பகுதியில் வசிக்கும் உமா மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் கூறியதாவது , கடந்த 2½  வருடங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் பிரபு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் எனது மகன், மகளை தையல் வேலை செய்து படிக்க வைத்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால் நத்தம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். அங்கு எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் எனது கால்களில் ஒன்றை இழந்து தவித்து வருகிறேன். இந்நிலையில் என்னால் வேலைக்கும் செல்ல முடியாததால் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எனது மகன், மகளை படிக்க வைக்க முடியவில்லை. எனவே எனக்கு தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தேன் என்றார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். அதன்பின் அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.

Categories

Tech |