அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்ததால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளார்.
இந்நிலையில் சசிகலா ஊர் ஊராக சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். இவர் தற்போது உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் வானூர் உட்பட்ட பகுதிகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். அதன் பிறகு ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி பேச தொடங்கியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தின் போது 16 தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்றும், ஓ,பி,எஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கிவிட்டு பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எது எப்படி இருந்தாலும் எடப்பாடியை எதிர்ப்பதை மட்டும் தான் சசிகலாவும், ஓ. பன்னீர்செல்வமும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.