மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் ஏழுமலை-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சர்வேஸ்வரசுவாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று முன்தினம் தான் வேலை செய்யும் வயலுக்கு சர்வேஸ்வரசுவாமியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஸ்வரசுவாமி தெரியாமல் தரையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட சர்வேஸ்வரசுவாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பின்னர் சர்வேஸ்வரசுவாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வேஸ்வரசுவாமி நாளை முதல் பள்ளிக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.