தட்டிக்கேட்ட வாலிபரிடம் டிரைவர், கண்டெக்டர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நாகல்நகர் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. இதேபோன்று நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்துகளும் இதே பாலத்தில் வந்து நாகல்நகர் ரவுண்டானாவை கடந்து மெங்கில்ஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு, சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் வாகனங்கள் மெங்கில்ஸ் சாலைக்கு செல்லாமல் தடுக்க பாலத்தில் சிறிது தூரம் வரை இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையும் மீறி சிலர் தங்கள் வாகனங்களில் பாலத்தில் இருந்து இறங்கியதும் மெங்கில்ஸ் ரோட்டுக்கு செல்கின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் நத்தம் சாலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து ஒன்று விதிமுறையை மீறி மெங்கில்ஸ் சாலைக்கு செல்வதற்காக மேம்பாலத்தில் இடதுபுறமாக செல்வதற்கு பதிலாக வலதுபுறமாக வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் மெங்கில்ஸ் ரோட்டில் இருந்து மேம்பாலத்தில் ஏறுவதற்காக வந்தார். இதனால் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் பேருந்தை பாலத்தின் அடிவாரத்தில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். இதனையடுத்து டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து அந்த வாலிபருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து டிரைவர் கண்டக்டரை கண்டித்து வாலிபருக்கு ஆதரவாக பேசினர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்-கண்டக்டர் நைசாக நழுவி பேருந்தை அங்கிருந்து எடுத்து பேருந்து நிலையம் நோக்கி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, விதிமுறையை மீறி பேருந்தை இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.